சென்னை: தமிழ்நாடு மதுபான விற்பனை உரிம விதிகளின்படி, மது விற்க உரிமம் பெற்ற கிளப்கள், ஹோட்டல்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டும் மது விற்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல கிளப்கள், ஹோட்டல்களில் மதுபானங்கள் வழங்கப்படுவதாகவும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் கிளப்களில் மதுபானங்கள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் பாபு என்பவர், உயர் நீதிமன்றத்தில் இன்று (மே 24) பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'கிளப்கள், ஹோட்டல்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அதிகாலை 3 மணி வரைக்கும் மதுபானங்கள் வழங்கப்படுவதாக புகார் அளித்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்றுள்ள இந்த கிளப்கள், ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்துவதுடன், விதிமீறும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்' என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி புகழேந்தி தலைமையிலான அமர்வில் நாளை (மே 25) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா; திமுக புறக்கணிப்பது ஏன்? திருச்சி சிவா விளக்கம்