தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில் உள்ள 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் 14ஆவது நிதிக்குழு மற்றும் மாநில நிதிக்குழு நிதியிலிருந்து 969 புள்ளி 32 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது.
இதில் அதிக விலைக்கு எல்இடி விளக்குகளை கொள்முதல் செய்வதன் மூலம் 500 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக திமுகவின் முன்னாள் எம்எல்ஏ அப்பாவு லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அனுப்பியிருந்தார்.
இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல், உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளித்துள்ளதாக கூறி திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
அதில், தனது புகாரை ஆளுநருக்கு அனுப்பி அவரது ஒப்புதலைப் பெற்று அமைச்சருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'WE WISH KAMALA HARRIS' - கமலா ஹாரிஸுக்கு ரங்கோலி கோலத்தில் வாழ்த்து!