சென்னை: தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து, தமிழ்நாடு அரசு அக்டோபர் 19ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், எந்திர கோளாறு, கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக அதை அமல்படுத்துவதற்கு காவல்துறையினர், அப்பாவி மக்களை துன்புறுத்துவர் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் போக்குவரத்து விதி மீறல் - ரூ. 1.88 கோடி அபராதம்