சென்னை வேளச்சேரி ஆயில் மில் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த மாதம் 5ஆம் தேதி, சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால், அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அவசர ஊர்தி மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து மயக்க நிலையில் இருந்த நபரின் உறவினர் தாமோதரன் என்பவர், அடையாளம் தெரியாத வாகனம் இடித்துச்சென்றதாக பள்ளிக்கரணை போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பள்ளிக்கரணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கியதாக சிகிச்சைப் பெற்றுவந்த நபர் கடந்த 24ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது. அந்த ஆய்வில், அவரது உடலில் காயம் இருந்ததால் அந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது.
இதனடிப்படையில், பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் ராணி விசாரணையைத் தொடங்கினார். முதற்கட்ட விசாரணையில் இறந்த நபரின் பெயர் குமார் என்பதும்; இவர் சம்பவத்தன்று வேளச்சேரி ஆயில்மில் பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் அமர்ந்து இருந்தபோது அங்கு வந்த வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் குமாரிடம் மது வாங்கி வரும்படி பணம் கொடுத்துள்ளார்.
மதுவால் நேர்ந்த விபரீதம்: பின்னர் வாங்கி வந்த மதுவை இருவரும் ஒன்றாக அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தபோது, மதுவை சரியாக பிரிக்கவில்லை எனக் கூறி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் குமாரை கீழே தள்ளி மார்பில் எட்டி உதைத்து தாக்கியுள்ளார். இதில் குமாரின் காதில் ரத்தம் வழிந்து மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் வாகன விபத்தில் சிக்கியதாக குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய பள்ளிக்கரணை காவல் துறையினர், கார்த்திக்கை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் கார்த்திக் ஊட்டியில் பதுங்கியிருந்தது தெரியவந்ததையடுத்து அங்குசென்ற காவல் துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: "நான் அவள் இல்லை" - 7 பேரை திருமணம் செய்து மோசடி செய்த 'பலே' பெண்