கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சிறைவாசிகளை அவர்களது உறவினர்கள் நேரில் காண அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து, சிறை கைதிகளுக்குச் செல்போன் வழங்கப்பட்டு, அவர்களது உறவினர்களுடன் காணொலி அழைப்பு மூலம் பேச அனுமதிக்கப்பட்டது.
தற்போது கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து, கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவருகிறது. சிறைக் கைதிகளை நேரில் காண அவர்களது உறவினர்கள் கோரிக்கைவைத்து-வருகின்றனர். எனவே சிறைவாசிகளின் நலனைக் கருத்தில்கொண்டு அவர்களது உறவினர்கள், நண்பர்களுடன் வருகின்ற 14ஆம் தேதிமுதல் மீண்டும் நேரில் வந்து காணலாம் எனச் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை முடிவுசெய்துள்ளது.
சிறைக் கைதிகளின் நேர்காணலின்போது பின்பற்றப்பட வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நெறிமுறை (Standard Operating Procedure) குறித்த அறிவுரைகளை, காவல்துறை தலைமை இயக்குநர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் சுனில் குமார் சிங் அனைத்துச் சிறை கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கியுள்ளார்.
- சிறைக் கைதிகளை நேர்காணல் செய்ய விரும்பும் பார்வையாளர்கள் "e-Prisons Visitors Management System" அல்லது அந்தந்தச் சிறைககளுக்கென கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்னர் முன்பதிவு செய்ய வேண்டும்.
- நேர்காணலுக்கு முன்பு குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு முன்னதாக சிறைக்கு வருகைதர வேண்டும்.
- நேர்காணலின்போது ஒரு சிறைவாசியை ஒரு பார்வையாளர் மட்டுமே நேர்காணல் செய்ய அனுமதிக்கப்படுவார்.
- சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாள்களைத் தவிர்த்து ஏனைய நாள்களில் காலை 09 மணி முதல் மதியம் 02 மணி வரை நேர்காணல் தலா 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும்.
- மாதத்திற்கு ஒரு குடும்பம் நேர்காணல் செய்ய அனுமதிக்கப்படும்.
- மத்திய சிறைகளான புழல், மதுரை, கோவையில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 150 பார்வையாளர்களும், மற்ற மத்திய சிறைகளில் 100 முதல் 75 பார்வையாளர்களும் பெண்களுக்கான தனிச் சிறையில் 25 பார்வையாளர்களும் நேர்காணல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
- நேர்காணல் மனுக்கள் உறுதிப்படிவம் சிறைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.prisons.tn.got.in லிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: தைப்பொங்கலுக்குத் தயாராகும் மண் சிலை: ஒன்றின் விலை 150 ரூபாய்தான்!