சென்னை: ஆசியாவின் பெரிய நூலகமான கன்னிமாரா நூலகத்தில், நிரந்தர புத்தக கண்காட்சி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. 4 ஆயிரம் சதுர அடி ஒதுக்கப்பட்டிருந்த இந்த இடம், தற்போது, 120 பதிப்பாளர்கள் பங்கேற்கும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டு கூடுதல் விளக்குகள், மின் விசிறிகள் பொருத்தப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில், பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில், வாரத்தின் 7 நாட்கள், ஆண்டு முழுவதும், 10 விழுக்காடு கழிவுகளுடன் விற்பனை நடைபெறும் வகையில் நிரந்த புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பபாசி இணையதளம் வழியாகவும் விற்பனை நடைபெறும்.
இந்த நிரந்தர புத்தக கண்காட்சியை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று (ஜன.22) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தலைமை தாங்கினார்.
கடந்த ஆண்டு முழுவதும் கரோனா பொது முடக்கத்தால் புத்தக விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் 80 விழுக்காடு அளவிற்கு விற்பனை நடைபெறாமல் இருந்தன. இந்தாண்டு சென்னை புத்தக கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் இந்த கண்காட்சி நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பபாசியால், 120 பாதிப்பாளர்கள் பங்கேற்கும் வகையில், கன்னிமாரா நூலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிரந்தர புத்தக கண்காட்சி வாசகர்கள், புத்தக ஆர்வலர்களுக்கு இனிய செய்தியாக இருக்கும் என நம்பலாம்.
இதையும் படிங்க: தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறைக்கான புதிய கட்டடங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்!