சென்னை: பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய வழக்கில் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை. சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்று குறிப்பிட்டுள்ளார். கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனுவை வரும் 29ஆம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரிக்க உள்ளார்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சனைக்காக விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் கைது