வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர்கள் முத்துராமன், சிலம்பரசன் ஆகிய இரண்டு பேரை கடந்த ஆண்டு மார்ச் மாதம், திருப்பத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரும் பிணையில் வெளிவந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததை எதிர்த்து, திராவிடர் கழகப் பிரமுகர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், ”பாஜக தேசியச் செயலாளர் எச். இராஜா அவருடைய டிவிட்டர் பதிவில் லெனின் சிலையை உடைத்தது போல, பெரியார் சிலையையும் உடைக்க வேண்டும் என்று பதிவிட்டதன் தொடர்ச்சியாக இது போன்று பெரியார் சிலைகள் உடைக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருப்பத்தூரில் நடைபெற்ற சம்பவமும் இதன் தொடர்ச்சியாகதான் நடைபெற்றது. எனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இராஜமாணிக்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, இந்த வழக்கில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திருப்பத்தூர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க...பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாக ஐபிஎஸ் மனைவி மீது புகார்