சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. முதல் அலையின்போது சுமார் ஏழு மாதங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தியது தமிழ்நாடு அரசு, அதன்பின் படிப்படியாக நோய்த்தொற்று குறைந்த காரணத்தால் தளர்வுகளை அளித்தது. இந்நிலையில், தேர்தல் பரப்புரை, திருமணம் முதலிய நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் கூடியதாலும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றிய காரணத்தினாலும் மீண்டும் தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து தற்போது இரண்டாம் அலை பரவி வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் (ஏப்.09) பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று (ஏப்.10) இரவு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் பொதுமக்கள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தது.
நேற்று இரவு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பால் சென்னையில் உள்ள முக்கியமான கடற்கரையான மெரினாவில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், தடையை மீறி வரும் மக்களுக்கு காவல் துறையினர் அறிவுரை கூறி திருப்பி அனுப்பிவைத்து வருகின்றனர். இந்தப்பணிகளில் முதற்கட்டமாக 20 காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் மூன்று குழுவாக சுழற்சி முறையிலும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து மெரினா சர்வீஸ் சாலை, கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை பொதுமக்கள் செல்லாத வண்ணம் இரு உதவி ஆய்வாளர் தலைமையில் 22 காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் கடைகள் அமைத்தும் வியாபாரம் செய்துவந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த தடையால் தங்களது வாழ்வாதாரம் மீண்டும் கடினமாக பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக வருத்தம் தெரிவித்தனர். இதற்கிடையில், தொற்றால் நாளொன்றுக்கு சுமார் ஆறாயிரம் பேர் பாதிக்கப்படுவதால் கரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.