சென்னை புறநகர் ரயிலில் அத்தியாவசியப் பணியாளர்கள் அல்லாத பெண்கள் இன்று (நவ.23) முதல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று குறைந்த அளவிலான பெண் பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வந்தனர். ரயில்கள் குறைவாக இயக்கப்படுவதால் பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணித்தனர்.
ஆட்டோ, பேருந்தில் பயணித்தால் அதிக செலவு ஏற்படுவதால் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கின்றனர். ஆனால், குறைவான ரயில் இயக்கப்படுவதால் பணிக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் அவர்களால் செல்ல முடியவில்லை.
பீக் ஹவரில் பத்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. விரைவில் ரயில் சேவை அதிகரிக்கப்படும் என தென்னக ரயில்வே அலுவலர்கள் கூறுகின்றனர்.
தற்போது நாளொன்றுக்கு 244 புறநகர் ரயில்கள் சென்னையில் இயக்கப்படுகின்றன. கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 40 சதவீத சேவை மீண்டும் இயக்கப்படுகின்றது.
கரோனா பாதிப்புக்குப்பிறகு சென்னை புறநகர் ரயிலில் அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மட்டுமே பயணித்து வந்தனர். படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அரசு அனுமதி வழங்கியது.
இருப்பினும், ஒரே நேரத்தில் பயணிகள் கூட்டமாக கூடுவர் எனவும், தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பது கடினம் என்றும் புறநகர் ரயில்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. அதன்படி இன்று முதல் பெண் பயணிகளுக்கும், 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கும் ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் அத்தியாவசியப் பணியாளர்கள் அல்லாத பெண்கள் திங்கள் முதல் சனிக்கிழமைகளில், அதிகாலை முதல் காலை 7 மணி வரை, காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை, இரவு 7.30 மணிக்கு பின்னர் அதிகாலை வரை பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக அனைத்து நேரங்களிலும் பெண்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின்போது மாதாந்திர பாஸ் அல்லது தினசரி டிக்கெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள் - காற்றில் பறந்த தனி மனித இடைவெளி!