கரோனா தொற்றுப் பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதையடுத்து, பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் பணிபுரிந்து வரும் மக்கள், ஊரடங்கினால் பிற இடங்களுக்கு செல்ல பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், கரோனா தீவிரத்தால் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு அவர்களை மேலும், அச்சத்திற்குள்ளாக்கி உள்ளது.
முழு ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர், சென்னையிலிருந்து வெளியேறுவது அதிகரித்துள்ளது. இன்றுடன் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகள் அனைத்தும் முடிவு பெற்று, நாளை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், இம்மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் தங்களது வாகனங்களிலேயே சொந்த ஊர் நோக்கி பயணப்பட ஆரம்பித்துள்ளனர்.
இதனால் காவல் துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து, பரனூர் சுங்கச் சாவடியை நோக்கிச் செல்வோரை திருப்பி அனுப்பும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இ-பாஸ் உள்ளவர்கள் மட்டுமே சுங்கச் சாவடி வழியே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் உரிய அனுமதி பெறாமலும் இ-பாஸ்கள் இன்றியும் சென்னையை விட்டு வெளியேற முயன்ற ஏராளமான வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : 21 குண்டுகள் முழங்க கரோனாவால் மரணித்த இன்ஸ்பெக்டர் பாலமுரளி உடல் நல்லடக்கம்!