இதன் ஒரு பகுதியாக சென்னையில் சிஐடியு, தொமுச உள்ளிட்ட அமைப்புகள் வள்ளுவர் கோட்டம் சுதந்திர தின பூங்கா, பல்லவன் இல்லம், கிண்டி பூங்கா உள்ளிட்ட மூன்று இடங்களில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா வரை 200க்கும் மேற்பட்டவர்கள் வாகனங்களில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு மாவட்ட செயலாளர் திருவேட்டை, "மத்திய அரசு விவசாயிகளுக்கும் உணவு உண்பவர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் வேளாண் சட்டங்களை இயற்றி இருக்கிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராடிவரும் விவசாயிகளை கண்டும் காணாமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசை கண்டிக்கும் வகையில் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு எங்களுடைய பேரணி நடைபெற்று வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆதரவுகளை தெரிவிப்போம்" என்றார்.
மேலும், இன்று (ஜன.26) நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருவதால் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் கொடியேற்றி விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதேபோல், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கங்களின் சார்பில் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பதாகைகளை ஏந்தியவாறு இருசக்கர வாகன பேரணியை தொடங்கினர். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: டிராக்டர் பேரணி - காவல்துறையினர் தடுப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை!