சென்னை: டாக்டர் அம்பேத்கர் 1956ஆம் ஆண்டு நாக்பூரில் பௌத்த மதத் தழுவலோடு பொது வாழ்வில் இறங்கிய விஜயதசமி தினத்தில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய 150 பேர் கொண்ட குழுவினர் நீல பறவை என்ற பெயரில் தனிவிமானத்தில், நாக்பூர் தீக்ஷா பூமிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டுச்சென்றனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் பூபதி கூறுகையில், 'மக்கள் மறுமலர்ச்சித் தடம்( MMT) என்ற அமைப்பானது சனநாயக சமத்துவச்சிந்தனையுடன் கூடிய சில மருத்துவர்களால் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுத் திருச்சியைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வருகிறது.
இந்த அமைப்பானது பௌத்த கருத்துகளை உள்வாங்கி, இந்திய அரசியல் அமைப்புச்சட்டச்சிற்பி பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகள், கருத்துகளைத் தத்துவங்களை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
ஒடுக்கப்பட்ட மக்கள் கைகளிலும், மனதிலும் கட்டப்பட்ட சாதியம், தீண்டாமை போன்ற விலங்குகளை உடைத்துச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற இலக்குகளை அடைவதற்குத்தாய் மதமான பௌத்தம் தழுவலே தீர்வு என்கிற வழிகாட்டுதலை உருவாக்கினார். இதற்காகப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருந்தார். அம்பேத்கர் விஜயதசமியான 1956அன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் 10 லட்சம் மக்களுடன் பௌத்தம் தழுவினார்.
அதன் நீட்சியாக மக்கள் மறுமலர்ச்சித் தடம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், அரசு ஊழியர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் என அறிவுசார்ந்த 150க்கும் மேற்ப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து, நாக்பூரில் டாக்டர் அம்பேத்கர் பெளத்தம் தழுவிய தீக்ஷா பூமிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச்செல்கிறோம்.
இந்தத் தனிவிமானம் அதிக செலவினம், பண விரயம் ஆகிய கருத்துகளைப் புறந்தள்ளி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கருத்துகள் இந்தியாவில் உள்ள எல்லா மூலைமுடுக்குகளுக்கும் பரவ வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜெய்பீம் பறவையாக செல்கிறோம்.
இந்தப் பயணம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் பாபாசாகேப் டாக்டர் பிஆர் அம்பேத்கர் சிந்தனைகள், கோட்பாடுகளைக் கொண்டு செல்லும் முன்னோடியாக செயல்பட வேண்டும் என்பதே இந்த குழுவின் எதிர்பார்ப்பு.
அதேபோல் தமிழ்நாடு அரசு ஜெருசலேம், மெக்கா செல்லும் மக்களுக்கு எப்படி நிதி உதவி வழங்குகிறதோ அது போல் அம்பேத்கர் சிந்தனை பௌத்த சிந்தனை உடையவர்கள் தீக்ஷா செல்வதற்கு நிதி உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இதை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும்’ இவ்வாறு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தினமும் 20 மணிநேரம் வேலை - துபாய்க்கு வேலைக்குச்சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை