சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக வங்கி சார்ந்த சைபர் குற்றங்களை நூதன முறையில் சைபர் கொள்ளையர்கள் அரங்கேற்றிவருகின்றனர். அதுபோன்று ஒரு நூதன முறை சைபர் கொள்ளை தற்போது புதிதாக உருவாகி உள்ளது.
விநோத மோசடிகள்
ஒரு நபரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதுபோல் குறுஞ்செய்தி ஒன்று முதலில் செல்போனுக்கு வருகிறது. அவ்வாறு குறுஞ்செய்தி வந்தவுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தவறுதலாக உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்ததாகக் கூறி உரையாடல் நடத்துகிறார்.
வங்கிக் கணக்கிற்குச் சென்று பணம் உண்மையாக வந்துள்ளதா என ஆய்வுசெய்ய விடாமல் திசை திருப்பி, உடனடியாக கூகுள் பே அல்லது பேடிஎம் மூலம் அந்தப் பணத்தை, தொடர்புகொண்டு அடையாளம் தெரியாத நபரின் எண்ணுக்குத் திருப்பி அனுப்புமாறு கூறி சைபர் கொள்ளையர்கள் பணத்தை நூதன முறையில் கொள்ளை அடிக்கின்றனர்.
வங்கிக் கணக்கில் பணம் பரிமாறப்பட்டால் வங்கி அனுப்பும் குறுஞ்செய்தி போன்றே, போலியாகக் குறுஞ்செய்தி அனுப்பி நூதன முறையில் ஏமாற்றுவதை சைபர் கொள்ளையர்கள் தொடங்கியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற புகார்கள் சைபர் காவல் நிலையங்களில் தற்போது அதிகம் வந்துள்ளது.
இவ்வாறு வங்கிக் கணக்கிலிருந்து பணம் பரிமாறப்பட்டது போன்று குறுஞ்செய்தி செல்போனுக்கு வந்தால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அடையாறு துணை ஆணையர் விக்கிரமன் சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளார்.