தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போதுவரை திறக்கப்படாமல் உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
இதற்கு மாற்றாக தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் எடுத்துவருகின்றனர். தனியார் பள்ளிகளில் தற்போது இணைய வழி கல்வியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இது எந்த அளவில் சாதகமாக இருக்கும் என்கிற கேள்வியை மனிவள மேம்பாட்டு அலுவலர், சத்தியநாராயணனிடம் கேட்ட போது, "தற்போது தனியார் பள்ளிகளில் இணைய வழியில் பயிலும் மாணவர்கள், இதற்காக அவர்களின் பெற்றோருடைய செல்போன்களையோ அல்லது புதியதாகவோ வாங்கி பயன்படுத்திவருகின்றனர். இதற்காக குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இது தவிர ஒரு நாளைக்கு இரண்டு வகுப்புகளில் பாடம் கற்கும் மாணவர்கள் ஜூம் (zoom) போன்ற செயலிகள் மூலம் குறைந்தபட்சம் 2 ஜிபி அளவிற்காகவது இணைய சேவைக்காக செலவிடும் நிலை ஏற்படுகிறது.
ஒரு வீட்டில் இரண்டு மாணவர்கள் இருக்கும்பட்சத்தில் இருவருக்கும் சேர்த்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செல்போன்கள் வாங்க வேண்டும். அவற்றிற்கு தினந்தோறும் 2 ஜிபி என கொண்டாலும் இரண்டு மானவர்களுக்கும் சேர்த்து மாதம் ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்ய வேண்டும்.
இதனால் பெற்றோருக்கு பொருளாதார ரீதியில் மேலும் பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை மறுக்க இயலாது. அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கு கட்டணமும் கட்ட வேண்டிய இக்கட்டான சுழலில் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது பொருளாதார ரீதியிலான சிக்கல் என்றாலும், இதைத்தவிர தொடர்ந்து செல்போன்கள் பயன்படுத்தும் மாணவர்கள் ஏதேனும் ஆபாச வலைதளங்களைக் காண நேர்ந்தால் அவர்கள் மனதளவிலும் பாதிக்கக்கூடும், இவை தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த நேரிடும்.” என்றார்.
முன்னதாக, வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு என பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் பொது மக்களுக்கு இணைய வழி வகுப்புகளில் குழந்தைகளை கல்வி பயில்வதற்காக செல்போன்கள், அவற்றுக்கான இணைய பதிவேற்ற செலவுகள் மேலும் பொருளாதார சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும்.
இவை தவிர தனியார் பள்ளிகள் மூன்று தவணைகளாக கட்டணத்தை வசூல் செய்யலாம் என்கிற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்காக வழக்கதைவிட அதிகம் செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற பாதிப்புகளை கருத்தில் கொள்ளாமல் தனியார் பள்ளிகள் வகுப்புகள் எடுக்க அரசு அனுமதித்திருப்பதும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் பள்ளிக் கல்வித் துறையின் குழப்பான போக்காக எடுத்துக்கொள்ளப்படும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.