சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று (மே.11) தொடங்கி நடைபெற்று வரும் 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து இன்று (மே.12) சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்ட அப்பாவு, கு.பிச்சாண்டியை சட்டப்பேரவை துணைத் தலைவராக அறிவித்ததோடு, அவையையும் வழிநடத்தத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், இதுவரை சட்டப்பேரவை தலைவர்களாக பதவி வகித்தவர்களின் விவரங்களைக் காணலாம்.
1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசானதன் பிறகு மாநில சட்டப்பேரவை, சட்ட மேலவை என இரு அவைகள் செயல்பட்டன. இதில், சட்ட மேலவையின் தலைவர் சேர்மன் என்றும், கீழவையின் தலைவர் சபாநாயகர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார். தொடர்ந்து 1986ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டதை அடுத்து, சபாநாயகரே சட்டப்பேரவையின் தலைவராக முழு அதிகாரத்துடன் திகழ்ந்து வருகிறார்.
இதுவரை பதவி வகித்த சபாநாயகர்களின் பட்டியல் பின்வருமாறு:
பெயர் | பதவிக் காலம் | |
ஜெ சிவசண்முகம் பிள்ளை | 06 மே 1952 | 16 ஆக்ஸ்ட் 1955 |
என். கோபால மேனன் | 27 செப்டம்பர் 1955 | 01 நவம்பர் 1956 |
யு. கிருஷ்ணா ராவ் | 30 ஏப்ரல் 1957 | 03 ஆகஸ்ட் 1961 |
எஸ். செல்லபாண்டியன் | 31 மார்ச் 1962 | 14 மார்ச் 1967 |
சி. பா. ஆதித்தன் | 17 மார்ச் 1967 | 12 ஆகஸ்ட் 1968 |
புலவர் கே. கோவிந்தன் | 22 பிப்ரவரி 1969 | 14 மார்ச் 1971 |
கே. ஏ. மதியழகன் | 24 மார்ச் 1971 | 03 ஆகஸ்ட் 1973 |
புலவர் கே. கோவிந்தன் | 03 ஆகஸ்ட் 1973 | 03 ஜூலை 1977 |
முனு ஆதி | 06 ஜூலை 1977 | 18 ஜூன் 1980 |
க. இராசாராம் | 21 ஜூன் 1980 | 24 பிப்ரவரி 1985 |
பி. எச். பாண்டியன் | 27 பிப்ரவரி 1985 | 05 பிப்ரவரி 1989 |
மு. தமிழ்க்குடிமகன் | 08 பிப்ரவரி 1989 | 30 ஜூன் 1991 |
சேடப்பட்டி முத்தையா | 03 ஜூலை 1991 | 21 மே 1996 |
பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் | 23 மே 1996 | 21 மே 2001 |
கா. காளிமுத்து | 24 மே 2001 | 01 பிப்ரவரி 2006 |
ஆர். ஆவுடையப்பன் | 19 மே 2006 | 15 மே 2011 |
டி. ஜெயக்குமார் | 27 மே 2011 | 29 செப்டம்பர் 2012 |
பி. தனபால் | 10 அக்டோபர் 2012 | ஏப்ரல் 2021 |
தமிழ்நாட்டில் முதலாவது சட்டப்பேரவைக் காலத்தில் (1952-57) ஜே.சண்முகம் பிள்ளை, என்.கோபாலமேனன் ஆகிய இருவரும் நான்காவது சட்டப்பேரவை காலத்தில் (1967 - 71) சி.பா.ஆதித்தனார், புலவர் கே.கோவிந்தன் ஆகிய இருவரும், ஐந்தாவது சட்டப்பேரவை காலத்தில் கே.ஏ.மதியழகன், புலவர் கே.கோவிந்தன் ஆகிய இருவரும் பதினான்காவது சட்டப்பேரவை காலத்தில் டி.ஜெயகுமார், பி.தனபால் ஆகிய இருவரும் சபாநாயகர்களாக இருந்திருக்கிறார்கள். மற்ற சட்டப்பேரவைகளில் தொடக்கம் முதல் இறுதிவரை ஒருவரே சபாநாயகராக இருந்திருக்கிறார்.