இதுகுறித்து அவர், "நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக விலைவாசி உயர்ந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படிக்கவில்லை. பட்ஜெட்டைத் தயாரிக்கும்போது தலைமை பொருளாதார ஆலோசகருடன் அவர் கலந்தாலோசிக்கவில்லை.
மோசமான நிர்வாகம்
நிர்மலா சீதாராமன் மோசமான வகையில் பொருளாதாரத்தை நிர்வகித்து வருகிறார். அரசு நிர்ணயித்ததைவிட அதிக கடன் வாங்கப்பட்டுள்ளது. ஜிடிபியில் 3.5 சதவிகிதமாக நிதிப்பற்றாக்குறை இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அது 4.5 சதவிகிதமாக உள்ளது. அரசின் வரி வருவாய் இலக்கைவிட ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி குறைவாக கிடைத்துள்ளது.
தற்போதைய நிலையில் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்கள் வேண்டும். மத்திய அரசு முதலில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
இரண்டு பிரச்னைகள்
தற்போது இந்திய பொருளாதாரத்துக்கு இரண்டு முக்கிய பிரச்னைகள் உள்ளன. ஒன்று நாட்டில் தேவை குறைந்துள்ளது. அதாவது மக்கள் செலவு செய்வதில்லை, இதனால் பொருள்கள் விற்பனையாகாமல் அவற்றுக்கான தேவை குறைந்துள்ளது. மற்றொரு பிரச்னை முதலீடுகள் இல்லாதது. தேவை குறைவால் முதலீடுகள் குறைந்துள்ளது. யாரும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரவில்லை.
கோடிக்கணக்கான மக்களிடம் பணம் இருந்தால்தான் சந்தையில் தேவை அதிகரிக்கும். பணக்காரர்கள் வாங்கும் பொருள்களால் சந்தையில் தேவை அதிகரிக்கப்போவதில்லை. முதலீடுகளை அதிகரிக்க மத்திய அரசு முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.
தீர்வு என்ன...
அரசு செலவுகளை அதிகரிப்பது, தனியார் முதலீடுகள், தனியார் நுகர்வு, ஏற்றுமதி ஆகிய நான்கும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. நதிகளை தூய்மையாக்குவது முக்கியமானது என்றாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதுதான் மிகவும் முக்கியமானது. நதிகளைத் தூய்மையாக்குவது, புதிய விமான நிலையங்கள் அமைப்பது போன்ற திட்டங்களுக்கு பதிலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பி.எம் கிசான் திட்டம் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்கவரியை உயர்த்தியுள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படும். அதற்கு பதிலாக ஏற்றுமதிக்கு மானியம் வழங்கியிருக்காலம். இதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
இறுதியாக எல்ஐசி பங்கு விற்பனை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ப. சிதம்பரம், அரசு எதற்காக எல்ஐசி பங்குகளை விற்பனை செய்கிறது என்பதை தெளிவுபடுத்தவில்லை. வெறும் நிதிக்காக மட்டும் எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தால் அது தவறு" என்றார். தென்னிந்திய வர்த்தக சபை நடத்திய இந்த நிகழ்ச்சியில் நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘மாநில அரசுகளுக்கு இரு தவணைகளாக ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும்’