தமிழர் தேசிய முன்னணி தலைவர் நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இரு வணிகர்கள் தாக்கப்பட்டு, அதன் விளைவாக உயிரிழந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்தின் ஆணைப்படி அங்கு சென்ற கோவில்பட்டி நீதித்துறை நடுவரை உயர் அலுவலர்களும், காவலர்களும் அவமதிப்பாக நடத்தியதோடு, விசாரணைக்கு ஒத்துழைக்கவும் மறுத்தது அதிர்ச்சியை அளிக்கிறது.
ஆனாலும், உயர்நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், காவலரையும் நேரில் வரவழைத்துக் கண்டித்ததோடு, சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கும் வரை சிபிசிஐடி பிரிவு விசாரணை நடத்தவேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.
இதன் விளைவாக, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் உள்பட பல அலுவலர்கள் மற்றும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உள்ள அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இணைக் கண்காணிப்பாளரும், துணைக் கண்காணிப்பாளரும், ஒரு காவலரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதுமட்டும் போதாது.
முன்னாள் நீதியரசர் சந்துரு அவர்கள் கூறியுள்ளபடி, சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் மீது கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையாக ஆக்கப்படவேண்டும். இதில் ஏற்படும் தாமதம் குற்றவாளிகளுக்குத்தான் சாதகமாக முடியும். எனவே, இதை உடனடியாகச் செய்ய முன்வருமாறு தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் விவகாரம்: தீவிர விசாரணையில் சிபிசிஐடி!