சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்திப்பில்,’’வருகிற 30ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதாகவும், இதற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்து இருப்பதாகவும் அவர் கூறினார்.
வழக்கமாக எடப்பாடி பழனிசாமி பசும்பொன் பகுதியில் உள்ள சிலைக்கு மாலை அணிவிப்பார் என்ற கேள்விக்கு, கடந்த காலத்தில் பல முறை எடப்பாடி பழனிசாமி நந்தனத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து இருப்பதாக அவர் மறுப்பு தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், கோவை காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன் எனத் தெரியவில்லை? எனவும் தீபாவளி முடிந்து நான்கு நாட்களாகியும் அரசு மயக்கத்திலே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் தான் எடுத்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாகவும், எந்த விசாரணைக்கும் சட்டப்படி ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயார் என விஜயபாஸ்கர் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.
மழை நீர் வடிகாலில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலியான விவகாரத்தில் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் ஈடுபடாமல் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவரது மரணத்திற்குக் காரணமான கான்ட்ராக்டர், மாநகராட்சி பொறியாளர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் மரணமடைந்த ஊழியரின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி, அவர் வாழ்நாள் சம்பாதிக்கும் ஊதியத்தை அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என அவர் கூறினார். தமிழ்நாடு மாணவர்கள் ஆந்திராவில் தாக்கப்பட்டது தொடர்பாக அரசு இதுவரை வாய் திறக்கவில்லை எனவும் தமிழர்கள் எங்குத் தாக்கப்பட்டாலும் வாய் திறக்காத ஒரே கட்சி திமுக தான்’’ எனக் காட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 29ஆம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை