சென்னை : தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு நுழைவு வாயிலாக இருப்பது பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகள். சென்னையை விட்டு வெளியேறுபவர்களும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வருபவர்களும் இந்த இரண்டு பேருந்து நிலையங்களையும் கடக்காமல் செல்ல முடியாது.
தாம்பரத்தில் பேருந்து நிலையம்,ரயில் நிலையம்,மார்க்கெட் பகுதி என எப்போதுமே பல ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் முக்கிய இடமாக உள்ளது. அதேபோல் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தென்மாவட்டங்களுக்கு செல்வதும், அங்கிருந்து சென்னை வருவதுமாக இருக்கின்றனர்.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு பேருந்து நிலையங்களிலும் போதிய அடிப்படை வசதி இல்லாத அவலநிலை உள்ளதாக பயணிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
தாம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு நிலை நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் இணைத்து மாநகராட்சியாக அரசு தரம் உயர்த்தியுள்ளது. தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையிலும் முக்கிய பேருந்து நிலையங்களாக விளங்கும் தாம்பரம்,பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் பொது கழிப்பிட வசதிகள் தரமற்றும்,சிதலமடைந்தும் காணப்படுகிறது.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளில் கதவுகள் உடைக்கப்பட்டு, பீங்கான்கள் உடைந்து தண்ணீர் வசதிகூட இல்லாமல் சிதிலமடைந்து உள்ளது. அதேபோல் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இரண்டே இரண்டு கழிப்பிடம் மட்டுமே உள்ளது. அதுவும் எங்கே இருக்கிறது என பயணிகளுக்கு தெரியாத அளவிற்கு உள்ளது. அங்கு சுகாதாரமற்ற முறையிலும் உள்ளே சென்றால் தொற்று நோய் பரவும் நிலையில் இருப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பேருக்குதான் மாநகராட்சி ஆனால் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என பேருந்து பயணி நிதிஷ்குமார் கூறுகிறார். இது குறித்து அவர் நம்மிடம் கூறியதாவது, “ பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே உள்ளது. அதுவும் பேருந்து நிலையம் குப்பைகள் சூழ்ந்து சுகாதாரமற்ற முறையில் உள்ளது. கழிப்பறை வசதியே சரியில்லை.
தண்ணீர் வசதிகூட இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. கழிவறைக்கு சென்றால் நோய்த்தொற்று கண்டிப்பாக ஏற்படும். பேருக்குதான் மாநகராட்சி. ஆனால் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
“லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கும் பேருந்து நிலையத்தில் மூன்றே மூன்று கழிவறை தான். அதுவும் அசுத்தமாக இருக்கிறது. உள்ளே சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சரவணன் என்ற பயணி தெரிவித்தார்.
பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் மணிக்கணக்காக காத்திருந்தாலும் உட்காருவதற்கு கூட இடமில்லை என பயணி நித்தியா தெரிவிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் எந்த பேருந்து எங்கே நிற்க வேண்டும் என்பது கூட சரியான பெயர் பலகை கூட வைக்கவில்லை.
பல மணி நேரம் காத்திருந்தாலும் உட்காருவதற்கு கூட இடம் இல்லாத அவல நிலைதான் உள்ளது. பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கழிவறை எங்கு இருக்கிறது என்பதே பல பேருக்கு தெரியாது. இதனால் சாலை ஓரங்களில் சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. தமிழக அரசு தான் இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் உள்ளே சென்றதும் பயத்தில் வெளியே றி விட்டேன் என கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “ தாம்பரம் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வந்து செல்லும் இடமாக உள்ளது. ஆனால் அங்கு சரியான நிழற்கூடைகள் கூட இல்லை.
இரண்டு பேருந்து நிலையங்களில் உள்ள கழிவறைகளும் சரியாக பராமரிக்கப்படவில்லை இதனால் கழிவறைகள் உள்ளே கூட செல்ல முடியாத சூழ்நிலையில்தான் உள்ளது. இதனால் சிலர் வெளிப்புறத்திலேயே சிறுநீர் கழிக்கின்றனர். பேருந்து நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது இதனை ஏன் மாநகராட்சி கண்டுகொள்வதில்லை என்று தெரியவில்லை.
நானே ஒருமுறை தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றபோது பயந்து வெளியேறிவிட்டேன். ஏனென்றால் அதனுள் சென்றால் நிச்சயம் தோற்று நோய்கள் பரவி விடும். மாநகராட்சி அதிகாரிகள் இதனை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் நவீன கழிவறைகளை கட்டி அதை சீராக பராமரிக்க வேண்டும்.
ஆனால் அதிகாரிகள் அலட்சிய போக்காகவே உள்ளனர். இது அடிப்படை அத்தியாவசியமான ஒன்று. தாம்பரம் மாநகராட்சி உடனடியாக இரண்டு பேருந்து நிலையங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கூடுதலான கழிப்பறைகளை கட்ட வேண்டும்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையரும், மேயரும் நேரடியாக சென்று கழிப்பறைகள் எப்படி இருக்கிறது என்று பார்வையிட்டு அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுப்பீர்கள் என நம்புகிறேன்” என அவர் கூறினார்.
இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவனை தொடர்புகொண்டு பேசியபோது, “ தாம்பரம்,பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்துவதற்கு அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து ஆலோசித்து உள்ளோம். தாம்பரம்,பெருங்களத்தூர், குரோம்பேட்டை ஆகிய மூன்று பேருந்து நிலையங்களிலும் சுவச் பாரத் திட்டத்தின் கீழ் நவீன கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது. அடுத்த மூன்று மாதத்திற்குள் 3 பேருந்து நிலையங்களிலும் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்படும்” என உறுதியளித்தார்.
நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதும், கழிப்பிட வசதிகளுக்காக கோரிக்கை வைப்பது வேதனையான ஒன்று தான். எனவே பயணிகளின் நிலைமையை சரி செய்வதற்காக முக்கிய பேருந்து நிலையங்களில் நவீன கழிப்பிட வசதிகளை அரசு அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க : பல்லாவரம் வார சந்தை : ஏழைகளின் பிரம்மாண்டமான சூப்பர் மார்க்கெட்..