சென்னை: தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இவர்களுக்காக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்புப் பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும்.
அந்தவகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் திரும்பும் பயணிகளுக்காக கடந்த 11ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதேபோல பண்டிகை முடிந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்பும் மக்களுக்காக ஜனவரி 17ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் கோரிக்கைகள் கோரிக்கைகளாகவே நீண்டு வருகிறது.
பொங்கல் பண்டிகை முடிந்தபின், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வருவதற்காக 17 முதல் 19ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படும். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் பல கேள்விக்குறியாகவே இருந்துவருகின்றன.
இந்நிலையில், சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து சொந்த ஊர் திரும்பும் பயணிகள் போக்குவரத்துத் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல் தாம்பரம் மாநகரப் போக்குவரத்து கழக ரயில் நிலைய பேருந்து நிலையம் அருகிலிருந்து நெய்வேலி, வடலூர், சிதம்பரம் ஆகியப் பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக வழக்கமாக சென்னையிலிருந்து பொங்கல் பண்டிகைக்குச் செல்லும் கூட்டத்தைவிட இந்த முறை மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
பயணிகள் கூட்டம் சற்று குறைவாக இருந்தாலும், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் போதிய அளவுக்கு இடம் கிடைக்கவில்லை என்றும், போக்குவரத்துத்துறை சார்பில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர், பயணிகள்.
போதியப் பேருந்து வசதி இல்லாததால் பலமணி நேரம் காத்திருப்பது மட்டுமல்லாது, தனியார் பேருந்துகளில் அதிகளவு பணத்தை டிக்கெட்டிற்காக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
இதுகுறித்து பேசிய பயணி ஒருவர், 'அரசுப் பேருந்தில் 600 ரூபாய்க்கு இருக்கும் டிக்கெட் தனியார் பேருந்தில் மூன்றாயிரமாக உள்ளது. இந்தப் பணத்தை வைத்து மூன்று முறை சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பிடலாம் என்கிறார்' வேதனையுடன்.
அதுமட்டுமில்லாமல் தாம்பரம் பேருந்து நிலையங்களில் அதிகப்படியான நேரம் காத்திருக்கும் பயணிகள் கழிப்பறைகள் சுத்தப்படுத்தப்படாமல் அசுத்தமாக இருப்பதாகவும், இதனால் பயணிகள் கழிவறைக்குள் செல்லவே தயக்கமாக உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தனர்.
கழிவறைகள் ஒருபுறம் என்றால் குடிநீருக்காகவும் போக்குவரத்துத்துறையினர் எந்த ஏற்பாடுகளும் சரிவர செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.
வருடம் வருடம் கோரிக்கைகளாக மட்டுமே இருந்துவரும் பயணிகளின் கருத்துகளுக்கும் வேண்டுதலுக்கும் செவிசாய்க்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர், பயணிகள்...