அரசுப் பள்ளிகளில் இசை, தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜசசுராஜா கூறுகையில், "பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆக பணியாற்றி வருகிறோம். அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி முழு நேர ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும்.
2012ஆம் ஆண்டு 16 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் தற்போது 12 ஆயிரத்து 917 ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு ஏழாயிரத்து 700 ரூபாய் மாதச் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதனை தற்போது 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கி உள்ளனர். ஏற்கனவே மூன்று அரை நாள்களாக இருந்த பணி நேரத்தை 3 முழு நாள்களாக மாற்றியுள்ளனர்.
எங்களுக்கு சம்பளம் உயர்வு என்பது முக்கியமல்ல. எங்களது பணியை நிரந்தரமாக வழங்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. எங்களுக்கு அனைத்து நாள்களும் பணி வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.