சென்னை: தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ், வசந்தி தம்பதியினர். இவர்களது ஒரே மகள் நந்தினி (15), பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். வயிற்று வலி பிரச்சனை காரணமாக மன்னடி பகுதியில் உள்ள நேசனல் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அன்று சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் பரிச்சோதனை செய்ததில் வயிற்றில் சிறுமிக்கு சிறு புண் இருப்பதாகவும், அல்சர் பிரச்சனை இருப்பதாகவும் கூறி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சிறுமிக்கு புதியதாக ஊசி செலுத்திய நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவசரசிகிச்சைக்கு மாற்றப்பட்ட சிறுமி இன்று காலை மரணமடைந்ததாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
சிறுமிக்கு தவறான ஊசியை மருத்துவமனை நிர்வாகம் செலுத்தியதை அடுத்து சிறுமி உயிரிழந்ததாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்கள் மற்றும் பெற்றோர் உடன் பேசி சிறுமியின் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேதப்பரிசோதனைக்கு பிறகே சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ரமேஷ், வசந்தி தம்பதியினருக்கு திருமணமாகி 6 வருடங்கள் கழித்தே சிறுமி நந்தினி பிறந்ததாகவும், மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்து விட்டதாகவும் கூறி பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் புரண்டு அழுதக்காட்சி காண்போரை கலங்கவைத்தது.
இதையும் படிங்க: ராஜராஜசோழனின் பிறந்த விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதலமைச்சர் ஸ்டாலின்