சென்னை: அரசு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் நீண்ட காலமாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், இதர வருவாயை பெருக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் இன்று (ஆகஸ்ட் 3) முதல் பயணிகள் சேவையுடன் பார்சல் மற்றும் கூரியர் சேவையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை மற்றும் ஓசூர் ஆகிய ஏழு நகரங்களில் இருந்து சென்னைக்கு பார்சல் சேவையை தொடங்க உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்த சேவையை தினசரி மற்றும் மாத வாடகை அடிப்படையில் பெறலாம் என தெரிவித்துள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம், ஒவ்வொரு நகரங்களில் இருந்தும் சென்னைக்கு பார்சல் சேவை வழங்குவதற்கு தனித்தனி கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளது.
விலை நிர்ணயம்: 80 கிலோ வரையிலான பார்சலை திருச்சியிலிருந்து சென்னை கொண்டு செல்ல 210 ரூபாய், மதுரையிலிருந்து சென்னை கொண்டு செல்ல 300 ரூபாய், திருநெல்வேலியிலிருந்து சென்னை கொண்டு செல்ல 390 ரூபாய், தூத்துக்குடியிலிருந்து சென்னை கொண்டு செல்ல 390 ரூபாய், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து சென்னை கொண்டு செல்ல 390 ரூபாய், கோவையிலிருந்து சென்னை கொண்டு செல்ல 330 ரூபாய், ஓசூரிலிருந்து சென்னை கொண்டு செல்ல 210 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனுப்பும் பார்சல்கள், ஒரே நாளில் சென்றடையும் வகையில் துரித சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தனியார் வாகனங்களில் பார்சல் கொண்டு செல்ல அதிக செலவாகும் நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்படும் இந்த பார்சல் சேவை தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு போக்குவரத்து துறை ஒருபோதும் தனியார் மயமாகாது - அமைச்சர் சிவசங்கர் உறுதி