சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு, சிங்கிலிபாடி, மாடபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தை கைவிடக் கோரி இக்கிராம மக்கள் நேற்று(டிச.19) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று போராட்டக்குழுவினருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் சட்டமன்ற குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, "அண்ணா பல்கலைக்கழகமும், ஐஐடியும் இணைந்து பரந்தூரில் ஆய்வு செய்து, அது விமான நிலையத்திற்கு உகந்த நிலமா? என்பதனை அறிக்கையின் வாயிலாக அரசிடம் சமர்ப்பிப்பர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைய வேண்டும் என்பது தேவையான ஒன்று. ஆனால், மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை அரசு நிறைவேற்ற வேண்டும். ஏகனாபுரத்தில் 650 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கோரிக்கை வைத்திருக்கிறேன்.
தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தியுள்ளோம்.
அதிமுக ஆட்சியில்தான் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முறையான ஆய்வு நடத்தாமல் இடத்தை தேர்வு செய்துள்ளனர். தற்போதைய திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக பரந்தூர் பகுதியில் முறையான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
இதையும் படிங்க: வரும் ஜனவரி 4-ல் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்