சென்னை: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர்சிங் (39). இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் பகுதியில் தங்கி தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 4 ஆம் தேதி அமர்சிங் ரோட்டரி நகர் பிரதான சாலையில் உள்ள 7வது தெரு சந்திப்பில் பானிபூரி வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அமர் சிங்கிடம் பானிபூரி வாங்கி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றார். இதனால் அந்த நபரிடம் சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கொடுத்துவிட்டு செல்லுமாறு அமர் சிங் கேட்டுள்ளார்.
![பானிபூரிக் கடையில் காசு தறாததால் தகராறு ; பானிபூரி வியாபாரி கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-panipooriissue-script-7202290_08102022111649_0810f_1665208009_814.jpg)
இதனால் ஆத்திரமடைந்த அவர், கீழே கிடந்த கல்லை எடுத்து அமர் சிங்-ஐ நோக்கி அடித்துவிட்டு அங்கிருந்து சென்றார். கல்லால் அடித்ததில் அமர் சிஙின் அடிவயிற்றில் உள்காயம் ஏற்பட்டது. பின் வியாபாரத்தை முடித்து வீட்டிற்கு சென்ற அமர் சிங்-க்கு வயிற்று வலி ஏற்பட்டதால் கடந்த 5 ஆம் தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச சென்று பரிசோதனை மேற்கொண்டார்.
அப்போது அவரது மண்ணீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். பின்னர் அமர் சிங்-க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்நோயாளியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே மருத்துவமனையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த ராயப்பேடை போலீசார் அமர் சிங்கிடம் புகாரைப் பெற்று உள் உறுப்புகளில் ஆயுதம் கொண்டு காயம் எற்படுத்துதல், மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பானிபூரி வியாபாரி அமர் சிங்-ஐ தாக்கியது திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (எ) விக்கி (26) என்பது தெரியவந்தது. பின்னர் விக்னேஷை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமர் சிங் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. கல்லால் தாக்கியதால் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் எனவும் அறிக்கையில் வரக்கூடிய தகவல்களை பொறுத்தே கொலை வழக்காக மாற்றலாமா, வேண்டாமா என முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்...