சென்னை: தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளராக கடந்த ஆறு மாதங்களாகப் பணிபுரிந்து வருபவர், ராணி. இவர் சாலை விபத்துகளை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
மேலும் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அரசு வாகனத்தை தனியார் நபர் ஒருவரை வைத்து, இயக்கி அதன் மூலம் தொடர்ந்து மாமூல் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் விபத்துகளில் சிக்குபவர்களை, தான் சொல்லும் வழக்கறிஞர்களை வைத்துதான் வழக்கை பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும்;அதன் மூலம் தனக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் கூறுவதாக சொல்லப்படுகிறது.
இவர் மீது மட்டுமில்லாமல் பல்வேறு புகார்களைப் பாதிக்கப்பட்டவர்கள், உளவுத்துறை அலுவலர்களிடம் தொடர்ந்து அளித்து வந்ததால், பள்ளிக்கரணை மாவட்ட காவல் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா பரிந்துரையின்பெயரில் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வாளர் ராணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராணியிடம் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வரதட்சணையாக புல்லட் தராததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்