சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஆர்.ஆர் ரமேஷ் என்பவர் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி முருகன் கோயிலில் 48 நாட்கள் மண்டல பூஜை பெயரளவிலேயே நடைபெறுவதாகவும், ஆகம விதிப்படி நடைபெறவில்லை என்றும், தைப்பூச திருவிழா நடைபெறுவதால் மண்டல பூஜை தடை பட வாய்ப்புள்ளதால், ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, இந்து அறநிலையத் துறை தரப்பில், ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தைப்பூசத் திருவிழாவால் மண்டல பூஜை எந்த வகையிலும் தடைபடாது.
48 நாட்கள் மண்டல பூஜையில் 11 கலசங்கள் வைத்து பூஜை நடைபெறும். இறுதி நாளில் 1,008 சங்கு பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். அதோடு ஆகம விதிப்படியே அனைத்தும் நடைபெறுவதாக சுட்டிக்காட்டினார். இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அவசர வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நெல்லை சிறை கைதிகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க புதிய ஐடியா!