சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை, தண்ணீரில் கரைத்து அதை ஊசியின் மூலம் உடலில் ஏற்றிக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, இதனை தடுப்பதற்காக காவல்துறை அதிகாரிகள், மருந்தக உரிமையாளர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், “மருத்துவர்கள் பரிந்துரை முறையாக இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உத்தரவை மீறி வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்தால், மருந்தக உரிமைகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலி நிவாரணி மாத்திரைகளை போதை பழக்கத்திற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருவதால், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளி மாநிலங்களிலிருந்து கொரியர் மூலமாக போதை மாத்திரைகளை சென்னைக்கு கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்ததாக சிலர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக கொரியர் சர்வீஸ்-க்கு காவல்துறை தரப்பில் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரியரில் வரவழைக்கப்படும் மாத்திரைகள் குறித்து, அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே போதைக்காக வலி நிவாரணிகளை ஊசியின் மூலம் உடலில் செலுத்தி, இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விரைவாக பாஸ்போர்ட் பெறுவது எப்படி? - மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி வசந்தன் கூறிய தகவல்கள்!