சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செப்.14) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ”தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்திற்கு புறம்பான ஆசிரியர்களின் பணிநியமன ஆணை ரத்து உத்தரவை நிறுத்த வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திருமலையை, கல்லூரி கல்வி இணை இயக்குநராக உயர் நீதிமன்ற ஆணைப்படி பணியமர்த்த வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
மேலும், பச்சையப்பன் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் ஆறு கல்லூரிகளுக்கும் உடனடியாக தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்ட விதி 14இன்படி தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காமல் சி.கே.என் கல்லூரியிலிருந்து இளநிலையில் உள்ள முதல்வர் முருகக்கூத்தனை, பச்சையப்பன் கல்லூரிக்கு முதல்வராக இடமாற்றுவதை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
அதோடு, பச்சையப்பன் அறக்கட்டளையின் பொருளாதாரத்தையும் நிதி ஆதாரத்தையும் வழக்குகள் என்ற பெயரில் வீணடிக்கும் இடைக்கால நிர்வாகி சண்முகம் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும், ஆசிரியர்களுக்கு பணி நீக்க ஆணை வழங்கிய அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இப்போராட்டம் நாளையும் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் அச்சத்தால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு: சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி