சென்னை: மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த தம்பதி நாகராஜ் - அன்பழகி. இவர்களது மகனான ஆண்ட்ரூஸ், பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.பொருளாதாரம் படித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழாவில் இரண்டு தங்கப்பதக்கங்களை ஆண்ட்ரூஸ் பெற்றார். இது ஒரு வரலாற்று நிகழ்வாகவே கல்லூரி தரப்பில் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த பச்சையப்பன் கல்லூரியில், ஆதிதிராவிடர் பிரிவில் பொருளியல் படித்து தங்கம் பதக்கம் பெற்ற முதல் மாணவன் என்ற பெருமையை ஆண்ட்ரூஸ் பெற்றுள்ளார். மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு பச்சையப்பன் கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவன் என்ற பெயரையும் ஆண்ட்ரூஸ் தக்க வைத்துள்ளார்.
இப்படி இரண்டு சாதனைகளை படைத்த ஆண்ட்ரூஸின் குடும்பத்தினர் மட்டுமின்றி, ஊர் பொதுமக்களும் வெகு விமரிசையாக இதனை கொண்டாடினர். சினிமாவில் காட்டுவது போல, சாதனை மாணவர் ஆண்ட்ரூஸை ஊர் பொதுமக்கள் தோளில் சுமந்து கொண்டு, மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்தனர். மேலும், அவருக்கு மாலை அணிவித்தும் கேக் வெட்டியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இவ்வாறு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவன் ஆண்ட்ரூஸ்க்கு ஊர் பொதுமக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். ஆரம்பக் கல்வி முதல் அரசு பள்ளியில் படித்த ஆண்ட்ரூஸ், பட்டப் படிப்பிற்காக பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். பதக்கம் பெற்றது குறித்து மாணவர் ஆண்ட்ரூஸ் கூறுகையில், “எந்தவித பெரும் பொருளாதார பிண்ணனியும் இல்லாதபோதும், என்னைப் படிக்க வைத்து ஆளாக்கிய எனது பெற்றோருக்கு என்னுடைய முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம், இது என்னுடைய தனிப்பட்ட வெற்றியோ அல்லது என்னுடைய குடும்பத்தின் வெற்றியோ அல்ல.
இது ஒரு சமுதாயத்தின் வெற்றி. முக்கியமாக, ‘கல்விதான் எப்பொழுதும் முதன்மையான ஒன்று’ என என்னிடம் கூறிய எனது போதகருக்கு நன்றி. பச்சையப்பன் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர், துறையில் உள்ள ஒவ்வொரு பேராசிரியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது அதே கல்லூரியில் எம்.பில் படித்து வருகிறேன். எனவே, இதிலும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற வேண்டும். மேலும், பச்சையப்பன் கல்லூரி மீதுள்ள பிம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை” எனக் கூறினார்.
மாணவர்களின் முறையற்ற செயல்பாடுகளை வைத்தே தவறாக அடையாளப்படுத்தப்படும், பச்சையப்பா கல்லூரியில் இருந்து ஒரு மாணவர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளது, மாணவர்களின் சிந்தனை ஓட்டத்தையும் மாற்றும் என நம்புகின்றனர். வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதோடு, ரியல் மாஸ் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தி வன்முறை அல்ல, கல்விதான் என்பதையும் மாணவர்கள் உணர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: பச்சையப்பன் கல்லூரி வகுப்பறையில் பேராசிரியர் முன்னிலையில் கானா பாட்டுப்பாடும் மாணவர்கள்!