சென்னை: நீண்ட நாட்களாக கல்லூரி மாணவர்களின் ரூட் தல பிரச்சனை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று (மே.16) மீண்டும் நடந்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே காலை 11 மணியளவில் திடீரென சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருவரையொருவர் கற்கள் மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அப்போது ரோந்து பாதுகாப்பு போலீசாரை கண்டதும் அனைத்து மாணவர்களும் சிதறி ஓடினர். அப்போது 4 மாணவர்களை போலீசார் துரத்தி சென்று பிடித்தனர்.
மேலும் துரத்தி பிடிக்கும் போது மாணவர் ஒருவர் அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் பையை மறைத்து விட்டு சென்றதை பார்த்த போலீசார் அந்த பையை திறந்து பார்த்தனர். அதில் 8 பட்டாக்கத்திகள் மற்றும் பல காலி மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் ரயிலில் வரும் திருத்தணி ரூட் மாணவர்கள் மற்றும் பூந்தமல்லி ரூட் மாணவர்கள் 40 பேர் தாக்கி கொண்டது தெரியவந்தது. மேலும் பூந்தமல்லி அருகே இரு குழு மாணவர்களும் வந்தபோது போலீசாரை கண்டதும் சிதறி ஓடியுள்ளனர். இதனால் பச்சையப்பன் கல்லூரியில் மோதல் ஏற்பட வாய்ப்பு என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு பச்சையப்பன் கல்லூரி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் முன்பே மாணவர்கள் மோதி கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த தாக்குதலில் மாணவர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கல்லூரி மதில் சுவர் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் 8 பட்டாக்கத்திகள் மற்றும் மதுபாட்டில்களை தாக்குதல் நடத்துவதற்காக மாணவர்கள் பதுக்கி வைத்திருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கத்தி சப்ளை செய்தது யார் எனவும் தப்பியோடிய மாணவர்கள் யார் எனவும் பிடிப்பட்ட மாணவர்கள் மற்றும் வீடியோவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட 4 மாணவர்களில் ஒருவர் ரூட் தல என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க உள்ளதாகவும், மேலும் கல்லூரி நிர்வாகம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்ய உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற சம்பவங்களில் மீண்டும் மாணவர்கள் ஈடுபடாத படி கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலையடுத்து கல்லூரியின் அனைத்து நுழைவு வாயில்களிலும் மாணவர்களை காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக கடந்தாண்டு ஜூன் மாதத்திலிருந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்ட 28 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : புத்தகப்பையில் பட்டாக்கத்தி: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல்