சென்னை: 2023ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ள நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை ஏராளமான வரலாற்றில் இடம் பெறும் சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. அரசியல் முதல் இயற்கை பேரிடர் வரை தமிழகம் சந்தித்த பல்வேறு சம்பவங்களைக் குறித்த செய்தி தொகுப்பினை காணலாம்.
ஜல்லிக்கட்டில் தொடங்கி பேரிடர் வரை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகத் தனியார் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க முடியாது என்றும் தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் எனத் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பின் மூலம் தமிழக அரசு 2023ம் ஆண்டில் தனது முதல் வெற்றியோடு பயணத்தைத் தொடங்கியது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ௧௦௦௦ தொடங்கி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குதல், சிங்கார சென்னை திட்டம், அதிலும் மிக முக்கியமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துதல் என பல்வேறு அறிவிப்புகள் 2023ஆம் ஆண்டில் தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
குறிப்பாகப் பெண்களுக்குக் கட்டணம் இல்லா பேருந்து மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்குதல் மேலும், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என பல்வேறு விமர்சனங்களை இந்த திட்டங்கள் எதிர்கொண்டன இருந்த போதிலும் தற்போது வரையிலும், இந்த திட்டங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
மேலும், தமிழகத்தில் முதன்முறையாகச் சர்வதேச அளவிலான அலைச்சறுக்கு போட்டியும் இந்த ஆண்டு நடத்தப்பட்டது.
"தமிழ்நாடா அல்லது தமிழகமா" வார்த்தை போராட்டத்தில் மோதிய தமிழக ஆளுநர்: தமிழ்நாடு என்னும் வார்த்தையினை விடத் தமிழகமெனும் சொல்தான் சரியானது என்று சர்ச்சை ஏற்படும் வகையில் தமிழக ஆளுநர் ரவி தனது சமூக வலைப்பக்கத்தில் கருத்து தெரிவித்ததை அடுத்து தமிழகம் vs தமிழ்நாடு என்ற சொல் ஆண்டின் தொடக்கத்திலேயே பேசுபொருளாகியது. அதற்குப் பிறகு பல்வேறு தீர்மானங்கள் தமிழக அரசு சார்பாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தாலும் தற்போது வரையிலும் பல்வேறு தீர்மானங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
கலைஞர் நூற்றாண்டு விழா: கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஓர் ஆண்டுக் காலம் வரை கொண்டாடப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுக் கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி சென்னையில் கிண்டி பல் நோக்கு மருத்துவமனை திறக்கப்பட்டது. கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.
நாகை முதல் இலங்கை வரை பயணிகள் கப்பல் சேவை: மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நாகை முதல் இலங்கை வரை பயணிகள் கப்பல் சேவை இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இப்படி அரசு அறிவித்த திட்டங்களின் செயல்பாடுகள் ஏராளமாக இருந்தாலும் கூட இந்த 2023ஆம் ஆண்டில் திமுக அரசு பல்வேறு சவால்களையும் இன்னல்களையும் சந்தித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் பொன்முடி வரை: மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது அதைத் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தரப்பிலிருந்து உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தொடர்ந்து ஜாமீன் வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்தாலும் தற்போது வரை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. அடுத்ததாகச் சொத்து வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து.
அவருக்கு மூன்றாண்டுகள் சிறையும் ரூ.50 லட்ச அபராதம் விதித்தது. இதனை அடுத்து பொன்முடி அமைச்சர் பதிவிலிருந்தும், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். அவரது துறை மற்றொரு அமைச்சருக்குக் கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளும் திமுகவிற்கு இந்த வருடம் மிகப்பெரிய இன்னலாகவே இருந்து.
சென்னையைத் தாக்கிய மிக்ஜாம்: டிசம்பர் மாதம் என்றாலே பேரிடர் மாதம் என மக்கள் மனதில் ஆழமாகப் பதிவாகியுள்ளது. அதற்குக் காரணம் 2004ல் ஏற்பட்ட சுனாமி, 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம். இந்நிலையில் இந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதும் சென்னையில் மிக்ஜாம்னுடைய கோரத்தாண்டவம் தொடங்கியது.
இந்த புயலின் காரணமாகச் சென்னையில் 40 சென்டிமீட்டர் அளவு மழைப் பதிவானது இதனால் சென்னை மாநகரம் முழுவதுமே ஸ்தம்பித்த நிலை காண முடிந்தது. ஒரு பக்கம் வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கமும், மறுபக்கம் வடசென்னை முழுவதும் மழை நீரில் மூழ்கியது. இந்த பேரிடரை எதிர்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வந்த நிலையில் ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்தது.
அதனைக் கண்டு கொள்ளாமல் மக்களின் சூழலை மட்டும் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அதன் காரணமாக ஓரிரு நாட்களில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அரசு அப்புறப்படுத்தியது. மேலும் உடனடியாக சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையும் வழங்கியது தமிழக அரசு.
தென்மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட கனமழை: மிக்ஜாம் புயலினுடைய தாக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாகவே தென் மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக வரலாறு காணாத மழைப் பதிவானது. குறிப்பாகத் தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப் பதிவானது. மேலும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பொதுமக்களுடைய குடியிருப்புகள் என அனைத்தும் இழந்த நிலையில் பொதுமக்கள் இருந்தனர்.
குறிப்பாக விவசாயிகளுடைய கால்நடைகள் விளை நிலங்கள் என அனைத்துமே சேதமடைந்தன. இந்த மழையின் காரணமாக இன்னும் ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழை நீர் அகற்றும் பணிகள் மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல தொடர்ந்து அந்த பகுதிகளில் அமைச்சர்களும் ஆய்வு செய்து வருகிறார்கள். மக்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மருத்துவ முகாம்களும் நிவாரண முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த வருடத்தின் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது: செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியினுடைய கைது நடவடிக்கை திமுக அரசிற்குப் பின்னடைவாக இருக்காது எனவும் குறிப்பாகத் தேர்தலுக்கு முன்னதாகவே செந்தில் பாலாஜி ஒருவேளை ஜாமீன் வழங்கப்பட்டு வெளியில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், செந்தில் பாலாஜி பொறுத்தவரை ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளர் எனவும் ஒருவேளை தேர்தல் நேரத்தில் அவர் இல்லை என்றால் கொங்கு மண்டலத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் சற்று திமுக அரசிற்குப் பின்னடைவாக இருக்கும் தவிர வேறு எந்த ஒரு பின்னடைவும் திமுகவிற்கு இருக்காது என்றார்.
மேலும், இந்த பேரிடர் இடர்பாடுகள் எல்லாம் திமுகவினுடைய வாக்கு வங்கியை எந்த வகையிலும் பாதிக்காது எனவும், குறிப்பாகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போது திமுக வாங்கிய வாக்குகளை விட இந்த ஆண்டு அதிகமான வாக்குகளைப் பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். அரசினுடைய செயல்பாடுகளைப் பொருத்தவரை எப்பொழுதும் போலவும் ஒரு சராசரியான ஆண்டாகத் தான் 2023ஆம் ஆண்டையும் தான் பார்ப்பதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: “தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது” அண்ணாமலை குற்றச்சாட்டு