சென்னை: ஆந்திராவிலிருந்து கும்மிடிப்பூண்டி வழியாக சென்னைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து போலீசார் தீவீர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் செவ்வாய் அன்று கும்மிடிப்பூண்டி எலாவூர் அருகே போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆந்திராவில் இருந்து வந்த ஆம்னி பேருந்து ஒன்றை நிறுத்தி பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். சோதனையில் 3 பெரிய பைகளில் வளையல், கம்மல், நெக்லஸ் என கொத்துக் கொத்தாக தங்க நகைகள் இருப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அந்த பைகளை கொண்டு வந்த பயணிகளிடம் நகைக்குண்டான ஆவணங்களை கேட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களிடம் நகைக்கான ஆவணங்கள் இல்லாததால் போலீசார் 3 பைகளில் இருந்த மொத்த நகைகளையும், இரு நபர்களையும் வியாசர்பாடியில் உள்ள போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நகைகளை கொண்டு வந்த நபர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் மற்றும் காளிமுத்து என்பதும், இவர்கள் சேலத்தில் உள்ள கோயம்புத்தூர் ஜுவல்லரி கடையில் விற்பனை ஊழியர்களாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. சேலத்திலிருந்து இவர்கள் 14.5 கிலோ தங்க நகைகளை விசாகபட்டினத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு கொண்டுச் சென்று அவர்களிடம் காண்பித்து ஆர்டரை பெற்றுக்கொண்டு, மீண்டும் நகைகளுடன் சேலத்திற்கு பேருந்தில் சென்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
பின்னர் உரிய ஆவணங்களின்றி சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 14.5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை பெற்று எடையிட்டு கொண்டுச் சென்றதோடு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் பண மோசடி - போக்குவரத்துக் காவலர் உள்ளிட்ட மூவர் சஸ்பெண்ட்!