தேர்தலில் வாக்களிக்க பணம் வழங்கும் கலாசாரம் கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. ஓட்டுக்கு பணம் தராவிட்டாலோ, அல்லது குறைவாக கொடுத்துவிட்டாலோ கோபப்படும் அளவுக்கு வாக்காளர்களின் மனநிலை மாறியுள்ளது.
மேலும், யார் பணம் கொடுத்தாலும் பெற்றுக்கொண்டு தான் விரும்பும் வேட்பாளருக்குத்தான் வாக்கு அளிப்பது என்கிற புதிய சித்தாந்த சிந்தனையும் பலரிடம் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறையில் தன்னார்வ இளைஞர்கள் சிலரின் முயற்சியில் ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம் என்ற விழிப்புணர்வை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக 'எங்களது வாக்குகள் விற்பனைக்கு அல்ல" என்ற வாசகங்கள் பதித்த 2000 ரூபாய் வடிவில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், இவர்கள் தங்கள் முயற்சியை குறும்படமாகவும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அந்த குறும்படம் பொதுமக்களிடம் தற்போது வைரலாக பரவி வருகிறது. வேட்பாளர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, வாக்குச் செலுத்த வாக்குச் சாவடிக்கே செல்லாதவர்களுக்கு மத்தியில், யார் எப்படி போனால் எனக்கென்ன என்றிருந்துவிடாமல் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள இந்த இளைஞர்களின் முயற்சி பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!