சென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ள மீனவர் குடியிருப்பில் கரோனா வைரஸ் தொற்றால் வாழ்வாதாரம் இழந்த ஏழை, எளிய மக்களுக்கு அரிசி பைகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இன்று (ஆகஸ்ட் 13) வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், "தண்டையார்பேட்டை மண்டலத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கரோனா மொத்த பாதிப்புகளை கூறி மக்களிடம் ஒருவித பயத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இதனால் கரோனா பரிசோதனை செய்ய மக்கள் அச்சப்படுகின்றனர். புரிதல் இல்லாமல் ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். மேலும் ஐ.சி.எம்.ஆர் என்ற அமைப்பை சுட்டிக்காட்டி, 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தவறான தகவல்களை ஸ்டாலின் கூறிவருகிறார். முதலில் அது ஐ.சி.எம்.ஆர். இல்லை, ஐ.எம்.ஏ என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த அமைப்பின் தமிழ்நாடு செயலாளர், ஸ்டாலின் கூறியதை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். இது தவறான தகவல் என்று கரோனா காலத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரிழந்த மருத்துவர்களை கரோனாவால் உயிரிழந்தார்கள் என்று ஸ்டாலின் கூறுவது என்ன நியாயம் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
அதேசமயம் ஐந்து மாதங்களாக நாங்கள் ஆற்றிய கரோனா தடுப்புப் பணி மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. இதன் தாக்கம் வருகின்ற தேர்தலில் தெரியவரும் என்று நம்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க:தகுந்த இடைவெளியுடன் நடைபெற்ற சுதந்திர தின விழா ஒத்திகை!