சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 16ஆம் தேதியன்று திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்தத் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரையின்படி, இன்று முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் காலை 8 மணி முதல் 10.30 வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
மற்ற வேளையில் உணவு வழங்கப்படும். இந்த அன்னதானத் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 பக்தர்கள் பசியாறுகின்றனர். இதனைத் தொடர்ந்து மற்ற திருக்கோயில்களிலும் ஒரிரு நாள்களில் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : திருப்பதியில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி எப்போது?