தனியார் சுற்றுலாப் பேருந்து உரிமையாளர்கள் திருமூர்த்தி, தமிழ்செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், நாகலாந்து, புதுவையில் பதிவு செய்யப்பட்டுள்ள தங்கள் பேருந்துகளை புதுவையில் இருந்து கோவைக்கு இயக்கியபோது, கடலூர் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் சட்ட விரோதமாக பேருந்தை மடக்கி நிறுத்திவிட்டதாகத் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வாகனத்தை இயக்க அகில இந்திய அளவில் அனுமதி பெற்றுள்ளதால், தமிழ்நாடு மோட்டார் வாகன வரிச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வாகனத்தை இயக்க தனியாக வரி செலுத்த அவசியமில்லை என்றும், தமிழ்நாட்டுக்கு தனியாக வரி செலுத்தினால் அது இரட்டை வரி செலுத்துவது போல் ஆகிவிடும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிகளின்படி வெளி மாநிலப் பேருந்தாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்குள் நுழையும்போது வரி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மத்திய அரசு கொண்டு வந்த புதிய விதிகளின்படி, மாநில அரசுகளுக்கு வரி விதிக்கும் சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு எடுத்து கொள்ளவில்லை என்பதால், மாநில அரசுக்கு வரி செலுத்தி தான் ஆக வேண்டும் என உத்தரவிட்டு மனுக்களை தள்ளுபடி செய்தார்.
இதையும் படிங்க: என் மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரம் அற்றது - திமுக எம்பி ரமேஷ்