சென்னை: ஆக்கிரப்பில் இருப்பதாகக் கூறி கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு பாஜக இளைஞர் அணித் தலைவரான வினோஜ் பி. செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியைப் பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பை உருவாக்கி, பொது அமைதியைக் குலைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்தார்.
அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல் துறையினர், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உள்பட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்பிணை கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர். பொங்கியப்பன் முன்பு இன்று (பிப்ரவரி 15) விசாரணைக்கு வந்தது.
அப்போது, வினோஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி. பால் கனகராஜ், இந்து முன்னணி கண்டனத்தைச் செய்தியாக வெளியிட்ட தினமலர் செய்தியை மேற்கோள்காட்டி மட்டுமே ட்விட்டர் பதிவிடப்பட்டதாகத் தெரிவித்தார்.

காவல் துறைத் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சந்தோஷ், செய்தியைப் பகிர்ந்ததைத் தாண்டி அரசின் செயல்பாட்டையும், தேர்தல் பரப்புரையாகச் செய்துள்ளார் எனவும் அவரது பதிவிற்கு அவரது பாலோயர்கள் கருத்து தெரிவித்ததையும் கவனத்தில் கொண்டே வழக்குப்பதிவு செய்யபட்டதாகத் தெரிவித்தார். தேர்தல் நடவடிக்கைகளுடன் மதத்தை தொடர்புபடுத்தி பதிவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வினோஜ் பி. செல்வத்தின் முன்பிணை மீதான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: திமுகவில் 52 பேர் தற்காலிக நீக்கம் – துரைமுருகன் அறிவிப்பு