நடிகர் விஜய் கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழ்நாடு அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. இந்நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி வணிக வரித்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இதே கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுக்களும் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவோடு சேர்த்து நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணை நடைபெற்றது.
நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 விழுக்காடு என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வணிக வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த மார்ச் 14ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில், நீதிபதி சுரேஷ்குமார் இன்று (ஜூலை 15) தீர்ப்பு அளிக்க உள்ளார்.
இதையும் படிங்க: தேசிய சின்னம் சர்ச்சை: அசல் சின்னத்தை வடிவமைத்த குடும்பத்தினர் வெளியிட்ட சான்றுகள்!