சென்னை: 10, 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சலுகைகளைக் கோரும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களைச் சான்றிதழ்களுடன் ஒப்படைக்க வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அதில், "10, 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களின் நலன்கருதி, குறிப்பிட்ட சலுகைகளைத் தேர்வு நேரங்களில் வழங்க அரசு அனுமதித்துள்ளது.
பார்வை மாற்றுத்திறனாளி, செவித்திறன் குறைபாடுடையோர், வாய் பேச இயலாதோர், எதிர்பாராத விபத்துகளால் உடல் ஊனமுற்று தேர்வு எழுத இயலாதோர், பாரிச வாயு போன்ற நோயால் பாதிக்கப்பட்டோர், எதிர்பாராத விபத்தினால் கைமுறிவு ஏற்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் குறைபாடு உள்ளவர்களுக்குச் சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது.
2021-2022ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களில் ஆறு வகைபாடுகளுக்குள்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருப்பின், பெறப்பட்ட பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையின் நகல் அல்லது மருத்துவக் குழுவின் பரிந்துரைக் கடிதம் ஆகியவற்றை பள்ளித் தலைமையாசியர்கள் சேகரிக்க வேண்டும்.
அவற்றை 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் எனத் தனித்தனியாகப் பிரித்து மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
தற்போது பத்தாம் வகுப்பு சம்பந்தமாக பெறப்பட்ட மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் கோரும் விண்ணப்பங்களைத் தொகுத்து, சரிபார்த்து, தகுதியுள்ளோரை உரிய சான்றுகளுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: திமுகவைச் சேர்ந்த கணவர், மனைவி போட்டியின்றித் தேர்வு!