சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இறுதியாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அன்றிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரிடையே மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே வருகிறது. ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து ஈபிஎஸ் நீக்கம் செய்தார்.
இந்த நிலையில் புதிதாக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசனின் நியமனம் செல்லாது எனவும், நான்தான் தற்போது வரை தேர்தல் ஆணையத்தின்படி ஒருங்கிணைப்பாளர் எனவும், ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும் வரை நான் தான் பொருளாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சட்ட விதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக ஈபிஎஸ் நியமித்துள்ளார் எனவும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் சட்டத்திற்கு புறம்பானது. ஆணையம் இறுதி முடிவை அறிவிக்கும் வரை ஆர்பிஐ வங்கிகளுக்கு உரிய வழிகாட்டுதல் தர வேண்டும். குறிப்பாக கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 கணக்குகளின் பண பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும் என சென்னை மண்டல ஆர்பிஐ இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா - 4 மாவட்டங்களுக்கு விடுமுறை