சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் காலை 9.45 மணியளவில் தலைமைச் செயலகம் வந்தடைந்தனர்.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உறுப்பினர்கள் வருகை தந்தபோது அவரோடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி பாதுகாப்பு காவலர்கள் உடன், கருப்பு உடையணிந்த 3 தனியார் பாதுகாவலர்கள் (பவுண்சர்கள்) உடன் வந்தனர்.
ஓ. பன்னீர்செல்வத்தை பாதுகாப்பாக சட்டப்பேரவை வளாகத்திற்குள் அழைத்துச் செல்ல முயன்ற அவர்களை காவல் துறையினர் அனுமதிக்காததால் திரும்பி வெளியேறிய மூவரும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் முன்புள்ள மரத்தடி நிழலில் காத்துக் கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வத்திடம், பேரவைக்கு பாதுகாவலர்களோடு வந்துள்ளீர்களே அதற்கு காரணம் என்ன என செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, சற்று தடுமாறிய ஓபிஎஸ், "அப்படியா? யாரு? அப்படி யாரும் எங்களோடு வரவில்லை” என பதிலளித்தார். அப்போது இடையே பேசிய வைத்தியலிங்கம், "பாதுகாவலர்களோடு வரவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அது தவறான தகவல்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுகவின் பொன்விழா - தனித்தனியாக கொண்டாடிய ஓபிஎஸ், இபிஎஸ்