முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து ஆளுநருக்கான கால அவகாசத்தை ஒரு வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் நீட்டித்தது.
இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், ”7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே ஜெயலலிதா அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு ட்வீட்டில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் ஜெயலலிதாவும், அவரது அரசும்தான்” என குறிப்பிட்டுள்ளார்.