நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் நகைச்சுவை நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நடிகர் விவேக் நேற்று (ஏப்ரல் 15) கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இந்நிலையில், நடிகர் விவேக் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரார்த்திப்பதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்பு சகோதரர் நடிகர் விவேக் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இவரைப் போலவே அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விவேக் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர்.