சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நேற்று(பிப்.23) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து, சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளருமான புகழேந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "நேற்று வெளியான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அதிமுகவே எடப்பாடி பழனிசாமி கைக்கு போனது போல் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தீர்ப்பின் முழுமையான நகலில் 38ஆவது பகுதியில் சில அம்சங்கள் பேசப்பட்டு இருக்கிறது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கு குறித்து சிவில் நீதிமன்றத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிவிட்டார் எனக் கூறுவது சுத்தமான பொய். நேற்று வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு நடந்ததா? இல்லையா? என்பது மட்டும்தான், மற்றபடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது எதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்காக ஒதுக்கப்பட்டது. அதை மற்ற யாரும் ஏற்க முடியாது. அவ்வாறு யாரேனும் அந்த பதவியை ஏற்றால், அதிமுகவின் அடிப்படைத் தொண்டன் கூட வழக்குத் தொடரலாம். நானும் இதற்காக வழக்கு தொடரப்போகிறேன். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிவிட்டார், ஓபிஎஸ் தனிமையாக்கப்பட்டார். ஓபிஎஸ் தோற்றுவிட்டார் என கூறுவது அனைத்தும் தவறு. எடப்பாடி பழனிசாமிக்கு திருமாவளவன் பாராட்டு தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் பண மழை பொழிகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் மீசை வச்ச ஆம்பளையாக இருந்தால் வா மோதிப் பார்க்கலாம் எனப் பேசுகிறார். ஆனால், திமுகவினர் சீமானுடன் மட்டும் பிரச்னை செய்கின்றனர், எடப்பாடி பழனிசாமி உடன் எந்த ஒரு பிரச்னையிலும் ஈடுபடவில்லை.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது இடத்திற்குத்தான் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சீமானும், எடப்பாடி பழனிசாமியும் இரண்டாவது இடத்திற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். தீய சக்தியிடம் இரட்டை இலை கிடைத்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
தற்போதும் மிக குறைந்த வாக்கு வாங்கி தோல்வியடைந்து நிற்கப் போகிறார்கள். இந்த தீர்ப்பின் மூலம் பொதுக்குழு செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது, ஆனால் எந்த உரிமையும் கொடுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு எதையும் விட்டுக்கொடுக்க முடியாது. சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற மாட்டார், ஓபிஎஸ் தான் வெற்றி பெறுவார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் சரியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையத்திடம் தமிழ் மகன் உசேன் மீது புகார் கொடுத்துள்ளேன். அவர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டுள்ளார்.
இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நிலுவைவில் உள்ள பிரதான வழக்குகள் மீதான விசாரணைக்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அந்த வழக்குகள் சட்டத்துக்குட்பட்டு சுதந்திரமாக விசாரித்து தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்" என்று கூறினார்.