சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 2ஆவது நாளாக ஓ. பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 22)காலை ஆஜராகி, தனது விளக்கத்தை அளித்தார். அவரிடம், ஆணையம் தரப்பு விசாரணை, சசிகலா தரப்பு விசாரணை மற்றும் அப்போலோ தரப்பு விசாரணை என 3 தரப்பிலும் விசாரணை நடைபெற்றது. இரண்டு நாட்களில் அவரிடம் 150-க்கும் மேற்பட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களில் 9 மணி நேரங்களுக்கும் மேல் விசாரணை நடைபெற்றது.
அப்போலோ மருத்துவமனையின் சிகிச்சை மீது முழு திருப்தி
தனிப்பட்ட முறையில் அப்போலோ மருத்துவமனை சிகிச்சையின் மீது எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் என்ன நோய்? என்ன சிகிச்சை? சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் யார்? என்ற விவரங்கள் எனக்குத் தெரியாது. அப்போலோவின் சிகிச்சையின் மீது நம்பிக்கையுடன் இருந்தேன் என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார். பின்னர் விசாரணை முடித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்,
‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து அரசின் சார்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தில் நேற்றும், இன்றும் ஆணையம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரியப் பதிலை அளித்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் எதிர்த்தரப்பில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரியப் பதிலை அளித்திருக்கிறேன்’ என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சம்மன் அனுப்பப்பட்ட தேதிகள்
இதுவரை ஆணையம் தரப்பிலிருந்து, 12 /12/2018 மற்றும் 20/12/2018 ஆகிய தேதி அன்று ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 26/12/18, 8/1/19,11/1/19, 23/1/19, 22/1/19,29/1/19, 14/2/19, 19/2/19, 25/2/19,26/4/19, ஆகிய தேதிகளில் அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டரில் , தேதி குறிப்பிட்டு கடிதம் வரப்படவில்லை. 7 முறை சம்மன் அனுப்பப்பட்டு 6 முறை எனக்குக் கடிதம் வந்தது. அதில் இரண்டு முறை 23-1-2019 சொந்த காரணங்களாலும் 19-2-2019 பட்ஜெட் இருந்த காரணத்தினாலும் ஆணையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது என ஆணையத்திற்குக் கடிதம் எழுதி அனுப்பினேன். அதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
எனக்குச் சம்மன் அனுப்பப்பட்டு இரண்டு முறைதான் ஆணையத்தில் ஆஜராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும் அவர் மரணம் அடைவதற்கு முன்பாக எக்மோர் கருவி எடுப்பதற்கும் அரை மணி நேரத்திற்கு நேரத்திற்கு முன்பாக பார்த்து வரலாம் என்று சொன்னதற்கும், இடையில் நான் எழுபத்தி நான்கு நாட்கள் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை. இதுதான் உண்மை. இது முரண்பாடு கருத்து இல்லை’ எனவும் கூறினார்.
பொதுமக்களின் சந்தேகத்தைப் போக்க சசிகலாவுக்கு வாய்ப்பு
’பொது மக்களின் கருத்தாக, சந்தேகம் இருக்கிறது என்று சொல்லித் தான் முதன்முதலாகப் பேட்டி கொடுத்தேன். இந்த சந்தேகத்தைப் போக்குவதற்கு சசிகலா அவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு நிரூபித்து இருந்தால் அவர்களால் அவர்கள் மேல் இருந்த குற்றச்சாட்டு நீக்கப்படும் என்ற கருத்தைச் சொல்லி இருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரியப் பதிலைத் தந்திருக்கிறேன். தெரிந்த கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளேன். தெரியாத கேள்விகளுக்குத் தெரியாது என்று பதில் அளித்தேன். ஆணையத்தின் விசாரணை எனக்கு முழு திருப்தியாக இருக்கிறது. எனக்குத் தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது’ என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை - ஓபிஎஸ்