சென்னை: இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், வேலை வாய்ப்புகளை அளிப்பதிலும் நாற்றங்காலாக விளங்குவது தொழில் துறை. இந்தத் துறைகளை ஊக்குவிக்கவும், தொழில் அமைதியை உருவாக்கவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், விற்பனை பாதிப்பு மற்றும் தொடர் இழப்பு காரணமாக சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையை அடுத்த ஆண்டு, இரண்டாம் காலாண்டில் மூடுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மூலப் பொருள்கள் பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும், நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கான தந்திரம் தான் இது.
எப்பொழுது உற்பத்தி தொடங்கப்படும், எப்பொழுது தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லையென்றும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர், தொழிற்சாலையை மூடுவது என்பது கடினமான முடிவு தான். எங்களுக்கு இதைத் தவிர வேறு முடிவு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
ஃபோர்டு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காரணமாக சுமார் 4,000 நேரடித் தொழிலாளர்களின் எதிர்காலமும், கிட்டத்தட்ட 40,000 மறைமுகத் தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்தப் பிரச்சனையில் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, ஃபோர்டு கார் நிறுவனம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு