சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை இன்னும் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடையில்லை, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடையில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் தற்போது வரை தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளன.
கர்நாடக தேர்தல் விரைவில் வர இருப்பதால் தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிச்சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பது தொடர்பாக 10 நாட்களில் முடிவெடுக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருந்த 10 நாட்களில் இன்னும் சில நாட்களே இருக்கின்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலையில் உள்ளது.
மேலும் தற்போது வரை நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறேன். என்னுடைய அனுமதி இல்லாமல் பல மாற்றங்களை ஈபிஎஸ் அணியினர் செய்துள்ளனர். இதனால் தன்னுடைய தரப்பை கேட்காமல் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என ஓபிஎஸ் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.