சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் குடும்பத்தினர் ரவீந்திரகுமார், ராஜா, சசிகலாவதி, பாலமுருகன், லதாமகேஸ்வரி ஆகிய 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்த இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சாட்சி விசாரணைக்காக இந்த வழக்கு, மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணையை அங்கிருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட குற்றம்சாற்றப்பட்ட அனைவரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெரியகருப்பையா, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 7 பேர் மீதான வழக்கை சிவகங்கையில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பன்னீர் செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படாததால், சொத்துக் குவிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து பன்னீர்செல்வம் உள்பட 7 பேரை விடுவித்து ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளார்.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 31) விசாரணைக்கு வரவுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏற்கனவே திமுக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகள் ரத்து செய்யப்பட்டதை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து விலக்கு பெற்ற ஆளும் கட்சி அமைச்சர்கள் மீதான வழக்குகளை மீண்டும் தூசி தட்டப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்த நிலையில், தற்போது முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான வழக்கும் மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: MK Stalin on Twitter Speaking For india : "தெற்கில் இருந்து ஒலிக்கும் குரலுக்காக காத்திருங்கள்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!